கதிர்வந்த நிலையில் நெற்பயிர்கள்
உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் கதிர்வந்த நிலையில் நெற்பயிர்கள் உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தளி
உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் கதிர்வந்த நிலையில் நெற்பயிர்கள் உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமராவதிஅணை
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை நீர் ஆதாரமாக கொண்ட இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அத்துடன் அமராவதி ஆற்றை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
நெல்சாகுபடி
கடந்த ஜனவரி மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. அத்துடன் அமராவதி அணையின் நீர்பிடிப்பு மற்றும் பாசனபகுதியில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டதால் நீர்இருப்பும் நிலையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து சாகுபடி பணியில் தீவிரம் காட்டினார்கள்.
மேலும் எந்திரத்தின் மூலம் நேரடி நெல் விதைப்பும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நெற் பயிர்கள் பராமரிப்பில் விவசாயிகள் தீவிரம் காட்டி வந்தனர். இதனால் அவை படிப்படியாக வளர்ந்து தற்போது கதிர்களில் பால் ஏறி பசேல் என்று காட்சி அளிக்கிறது. இதற்கிடையில் கோடை வெப்பத்தின் தாக்குதலால் பயிர்களில் வெள்ளைப்பூட்டை தாக்குதல் ஏற்பட்டது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மகிழ்ச்சி
இந்த சூழலில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமராவதி பகுதியில் மழை பெய்தது.இதனால் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.இதன் காரணமாக வெள்ளைபூட்டை தாக்குதல் தானாகவே கட்டுப்பட்டது.இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். மேலும் அணையில் பாசனத்திற்கு தேவையான நீர்இருப்பு உள்ளதால் 2ம் போக நெல் சாகுபடியில் எதிர்பார்த்த அளவு விளைச்சலை ஈட்ட முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story