வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்மேடு,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் டெல்லியில் 175 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து விவசாயிகள் கூட்டு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் அருள்ஒளி, வட்டார விவசாயிகள் சங்க தலைவர் துரைராசு, விவசாய சங்க செயலாளர் வேதரத்தினம், இயற்கை விவசாயிகள் சங்க காப்பாளர் சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி கடைத்தெருவில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கான உத்தரவாதம் மற்றும் வேளாண் வேலைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகிய 3 சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
நாகை அருகே ஐவநல்லூரில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசா்யிகள் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கிளை செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செல்லூர் கிளை செயலாளர் சிங்காரவேலு, நிர்வாக குழு உறுப்பினர்கள் துரைசாமி, அஞ்சான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமருகல் அருகே உள்ள தேவன்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்டாலின் பாபு தலைமை தாங்கினார். இதில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு உறுப்பினர் சிங்காரவேல், அனைத்திந்திய மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஜோஸ்பின் ராணி, கட்டுமாவடி கிளை செயலாளர் தமிழரசன் மற்றும் பலர் கலந்்து கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட விவசாய சங்க தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். இதில் கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அபுபக்கர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்தையன், விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் பாண்டியன், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கீழ்வேளூர் ஒன்றியத்தில் இருக்கை, காக்கழனி, சாட்டியக்குடி உள்ளிட்ட 12 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story