தேவையின்றி சுற்றிவந்தவர்கள் மீது வழக்கு: 3 நாட்களில் 1,550 வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி நடவடிக்கை


தேவையின்றி சுற்றிவந்தவர்கள் மீது வழக்கு: 3 நாட்களில் 1,550 வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 27 May 2021 7:16 PM IST (Updated: 27 May 2021 7:16 PM IST)
t-max-icont-min-icon

தேவையின்றி சுற்றி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் 3 நாட்களில் 1,550 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர், 

கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 10-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள், இறைச்சிக்கடைகள், டீக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆனால் அதன்பிறகும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

இதன்காரணமாக கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியது. கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மட்டுமே தீர்வு என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள், பால் விற்பனை கடைகள், மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன. பிற கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருப்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தஞ்சை மாவட்டத்தில் சகஜமாக மக்கள் இருசக்கர வாகனங்கள், கார்களில் சாலைகளில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். முழு ஊரடங்கை மீறி வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் வழக்குகளும் பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் சாலைகளில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.

அப்படி வாகனங்களில் வருபவர்களை போலீசார் வழிமறித்து எதற்காக வெளியே வந்தீர்கள். எந்த வேலையாக செல்கிறீர்கள் என கேள்வி கேட்டதுடன் அதற்கான இ-பதிவு சான்று, மருத்துவ சான்றிதழ், விளை பொருட்களை கொண்டு செல்வதற்கான சான்று ஆகியவை இருக்கிறதா? என கேட்டனர். எந்த சான்றிதழ்களும் இல்லாமல் தேவையின்றி வெளியே சுற்றி வந்தவர்களின் இருசக்கர வாகனங்கள், கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சை, வல்லம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதில் கடந்த 24-ந் தேதி 316 வாகனங்களும், நேற்றுமுன்தினம் 680 வாகனங்களும், நேற்று 554 வாகனங்களும் என மொத்தம் 1,550 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் எல்லாம் அந்தந்த போலீஸ் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Next Story