23 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிங்கப்பூர் தமிழர்


23 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிங்கப்பூர் தமிழர்
x
தினத்தந்தி 27 May 2021 7:26 PM IST (Updated: 27 May 2021 7:26 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிங்கப்பூர் தமிழர் ஒருவர் 23 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார்.

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. 

இதனால் நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதையொட்டி கொரோனா கால பேரிடர் உதவியாக சமூக ஆர்வலர்கள் பலர் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ கருவிகளை வழங்கி வருகின்றனர்.

 அதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிங்கப்பூர் தமிழர் ஒருவர் 23 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார். 

இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது:- 
திண்டுக்கல்லை சேர்ந்தவர் திலீப் பாபு. இவர் சிங்கப்பூரில் கணினி மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இதுகுறித்து அறிந்த திலீப் பாபு, தனது சொந்த ஊரில் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பதை பார்த்து தன்னால் முயன்ற உதவியை செய்ய ஏற்பாடு செய்தார். 

இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள 23 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவது என முடிவு செய்தார். 

அதன்படி சிங்கப்பூரில் உள்ள திலீப் பாபு, திண்டுக்கல் ரோட்டரி கிளப் சங்க நிர்வாகிகள் மூலமாக அந்த கருவிகளை வழங்க ஏற்பாடு செய்தார்.

 இதையொட்டி திலீப் பாபு சார்பில் ரோட்டரி கிளப் சங்க நிர்வாகிகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம், 23 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நேற்று வழங்கினர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story