ஓட்டப்பிடாரம் அருகே வீட்டில் ரூ.8 லட்சம் புகையிலை பொருட்கள் பதுக்கிய வியாபாரி கைது
ஓட்டப்பிடாரம் அருகே, வீட்டில் ரூ.8 லட்சம் புகையிலை பொருட்கள் பதுக்கிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே, வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் பதுக்கல்
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள சிவஞானபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் எட்டையபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னாபீர்முகம்மது, எப்போதும்வென்றான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் தனிப்படையினர் சிவஞானபுரத்துக்கு விரைந்து சென்றனர்.
அதிரடி சோதனை
அங்குள்ள தெற்குத் தெருவைச் சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் (வயது 42) என்ற வியாபாரி வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அங்கு 15 சாக்கு மூட்டைகளில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 400 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ. 8 லட்சமாகும்.
வியாபாரி கைது
இது தொடர்பாக எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரி அறிவழகனை கைது செய்தனர். இவர் ஏற்கனவே இது போன்று 2 புகையிலை பொருட்கள் சம்மந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எப்போதும் வென்றான் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பார்வையிட்டு, தனிப்படையினரை அவர் பாராட்டினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
75 பேர் மீது குண்டர் சட்டம்
இந்த ஆண்டில் கடந்த 4 ½ மாதத்தில் 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை செய்ததற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை 83 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 103 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இந்த ஆண்டு மட்டும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்திருந்தவர்கள் என 156 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதில் 4 பேர் புகையிலை வழக்கில் ஈடுபட்டவர்களும், 4 பேர் கஞ்சா வழக்கில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனங்கள் பறிமுதல்
மேலும் இந்த கொரோனா கால ஊரடங்கில் கடந்த 3 நாட்களில் மட்டும் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களின் 1420 இரு சக்கர வாகனங்களும், 24 ஆட்டோக்களும், 5 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வீட்டு விட்டு வெளியே வரவேண்டாம். கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைய ஆரம்பித்துள்ளது. அதனால் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை எளிதாக கட்டுப்படுத்திவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story