முத்தையாபுரத்தில் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்


முத்தையாபுரத்தில் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2021 8:40 PM IST (Updated: 27 May 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரத்தில் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தனியார் தொழிற்சாலை நுழைவுவாயிலை முற்றுகையிட்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணல் லோடு விவகாரம்
தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ராக் பாஸ்பேட் மணல் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்த பணிகளில் லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் எடை கூடுதலாக மணல் லோடு ஏற்றப்படுவதாகவும், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
மறியல் போராட்டம்
இதனையடுத்து மற்ற லாரி உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள், கிளீனர்கள் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் மணல் லோடு ஏற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story