வீட்டில் இருந்தபடியே ஆலோசனை பெற இ-சஞ்சீவனி மருத்துவ சேவை. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்
வீட்டில் இருந்தபடியே ஆலோசனை பெற இ-சஞ்சீவனி மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இ-சஞ்சீவனி மருத்துவ சேவை
கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தேசிய தொலை ஆலோசனை மையத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட மக்கள், மருத்துவ தேவைகளுக்காக டாக்டர்களை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுவதை தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெற இ-சஞ்சீவனி மருத்துவ சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் ஆண்ட்ராய்டு செல்போன் வாயிலாக டாக்டர்களை கட்டணம் ஏதுமின்றி தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்று, அவர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகளை அருகில் உள்ள மருந்து கடைகளில் வாங்கி பயன்பெறலாம்.
பதிவிறக்கம் செய்து
இதற்கு தங்கள் ஆண்ட்ராய்டு செல்போன் பிளே ஸ்டோரில் e-sanjeevani app-ஐ பதிவிறக்கம் செய்து தங்கள் செல்போன் எண்ணை பதிவு செய்து திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வார நாட்கள் முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த ஆலோசனைகளை பெறலாம். ஆலோசனைகளின் தொடர்ச்சியாக டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து பொருட்கள் பட்டியலை பதிவிறக்கம் செய்து மருந்து கடைகளில் வாங்கி நலம் பெறலாம்.
இச்சேவை குறித்த சந்தேகங்களை பெற 011 - 23978046 மற்றும் இலவச செல்போன் தொடர்பு எண் 1075, மின்னஞ்சல் முகவரி ncov2019@gov.in ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இக்காலத்தில் வீட்டிலிருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story