திருவெண்ணெய்நல்லூர் அருகே காய்ந்து கருகும் நெற்பயிர்களால் விவசாயிகள் கவலை - பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க கோரிக்கை
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்மாற்றி பழுதால் நெற்பயிர்கள் காய்ந்து கருகுகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் அருகில் உள்ள ஏராளமான விளை நிலங்களுக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு இந்த மின்மாற்றி பழுதானது. இதனால் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை மின்மாற்றியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 10 ஏக்கருக்கும் மேலான நெற்பயிர்கள் காய்ந்து கருகும் நிலை உள்ளது. மேலும் நாற்றாங்கால் விடப்பட்டு அதற்காக ஏர் உழுத வயலும் காய்ந்து வருவதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
எனவே பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக சரிசெய்ய மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story