தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைபெற கட்டணம் நிர்ணயம்


தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைபெற கட்டணம் நிர்ணயம்
x
தினத்தந்தி 27 May 2021 10:46 PM IST (Updated: 27 May 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனா நோய் தொற்று சிகிச்சை மேற்கொள்ள விழுப்புரம் இ.எஸ். மருத்துவமனை, விழுப்புரம் இ.எஸ்.செவிலியர் கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கொரோனா தொற்று சிகிச்சைகளுக்கு ஆகும் செலவினங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கட்டணம்

இதையொட்டி ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் (ஏ 3 முதல் ஏ 6 தரவரிசையில் உள்ள தனியார் மருத்துவமனைகள்), ரூ.7 ஆயிரம் (ஏ 1 முதல் ஏ 2 தரவரிசையில் உள்ள தனியார் மருத்துவமனைகள்), ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரமும், வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரமும், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதிக்கு ரூ.30 ஆயிரமும், ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு மட்டும் ரூ.25 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

இந்த கட்டணம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பொருந்தும். அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story