கோவையில் 4734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கோவையில் 4734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 May 2021 11:02 PM IST (Updated: 27 May 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் 4734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை

தொடர்ந்து 2-வது நாளாக கோவையில் 4,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மாநில அளவில் முதலிடம் பிடித்தது. கொரோனாவுக்கு நேற்று 32 பேர் பலியானார்கள்.

கொரோனா 2-வது அலை

கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை கடந்த மார்ச் மாதம் இறுதியில் அதன் தாக்குதலை தொடுத்தது. 

தற்போது கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. கொரோனா தொற்றால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். 

முதல் அலையை காட்டிலும் கொரோனா 2-வது அலை வீரியம் அதிகளவு உள்ளதால் தொற்றுக்கு ஆளானவர்களின் நுரையீரல் பாதிக்கப்படுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அவர்களுக்கு  ஆக்சிஜன் வழங்கினால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.

2-வது நாளாக முதலிடம்

இந்த நிலையில் கோவையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 4,268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

இதன் மூலம் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் பட்டியலில் சென்னையை பின்தள்ளி கோவை முதலிடம் என்ற சோகமான சாதனையை தனதாக்கிக்கொண்டது. 

 இதையடுத்து நேற்றும் ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 4,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இது கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். 

இதன் மூலம் கோவை மாவட்டம் மாநில அளவில் தொடர்ந்து 2-வது நாளாக முதலிடம் என்ற கருப்பு முத்திரையை பதித்து இருக்கிறது. ஆனால் சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,779 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னையை காட்டிலும் கோவையில் இரு மடங்கு கொரோனா பாதிப்பு உருவாகி உள்ளது.

32 பேர் பலி

நேற்று 4,734 பேருக்கு தொற்று உறுதியானதால் கோவை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 55 ஆயிரத்து 820 ஆக உயர்ந்தது. மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,930 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.  

நேற்று ஒரே நாளில் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 32 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். 

இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,135-ஐ தொட்டது. தற்போது 37 ஆயிரத்து 488 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story