கூடலூரில் விடுதியில் தங்கியிருந்த 2 பேரிடம் துப்பாக்கி பறிமுதல்
கூடலூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 2 பேரிடம் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இது பொம்மை துப்பாக்கியா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்து இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த நிலையில் கூடலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தேகப்படும்படி 2 பேர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்போில், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசிங், இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பெள்ளி, மணிதுரை மற்றும் போலீசார் அந்த விடுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு தங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் 2 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. தொடர்ந்து அந்த அறையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கைத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது ஊரடங்கு முன்பு கூடலூர் வந்து விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. மேலும் துப்பாக்கியின் தன்மை குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அவர்கள் எதற்காக துப்பாக்கி வைத்திருந்தனர் என தெரியவில்லை.
இதையொட்டி கூடலூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த 2 பேரையும் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தியபோது அது பொம்மை துப்பாக்கி என்று தெரிவித்தனர். அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து, அது பொம்மை துப்பாக்கி தானா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story