கருப்பு பூஞ்சை நோயால் தாசில்தார் பாதிப்பு
கருப்பு பூஞ்சை நோயால் கள்ளக்குறிச்சி குடிமை பொருள் தாசில்தார் பாதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் குடிமை பொருள் தாசில்தாராக வெங்கடேசன் (வயது 44) என்பவர் பணி புரிந்து வருகிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக கடந்த 5-ந் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து விட்டதாக கூறி வெங்கடேசனை மருத்துவமனை நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி வெங்கடேசன் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும், குணமடையும் முன்பே வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை குறித்து தவறான தகவல்களை கொடுத்து வருவதாகவும், தற்போது தனக்கு வாய்ப்பகுதி, உதடு, கண் பகுதிகள் வீங்கிய நிலையில் உணவு உண்ணமுடியாமல் வீட்டில் இருப்பதாகவும்,மேலும் தனக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருச்சி தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story