நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இருப்பு குறித்து அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இருப்பு குறித்து அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
நாமக்கல், மே.28-
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் கொள்கலனில் ஆக்சிஜன் இருப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு, அதில் இருந்து குழாய்கள் மூலம் மருத்துவமனைகளில் உள்ள பல்வேறு வார்டுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொள்கலனில் வாரம் ஒரு முறை திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்ட நிலையில், தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் 2 நாட்களுக்கு ஒரு முறை திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் ஆக்சிஜன் அளவை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு தினந்தோறும் மூன்று முறை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் படுக்கை வசதி வழங்குவதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து, கண்காணிப்பு தேவைபடுபவர்களுக்காக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 90 படுக்கைகள் வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அமைச்சர் ஆய்வு
இந்தநிலையில் நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டு உள்ள ஆக்சிஜன் கொள்கலனில் ஆக்சிஜன் இருப்பு குறித்து அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட கலெக்டர் மெகராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஸ்குமார், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (மருத்துவம்) சித்ரா, துணை இயக்குனர் (காசநோய்) கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story