1,337 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் 1,337 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும், 522 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை நடந்து வருவதாகவும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் தெரிவித்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 1,337 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும், 522 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை நடந்து வருவதாகவும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்
தற்போது நெல்லை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தாக்கம் மிக தீவிரமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் கிராமப்பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்படவில்லை.
குக்கிராமங்களில் வாழக்கூடிய பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்று மனநிலையிலேயே காணப்படுகின்றனர். இதனை போக்குவதற்காக மாவட்டத்தில் 204 ஊராட்சிகளில் உள்ள 1,337 குக்கிராமங்களில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமங்கள் முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் வீடு, வீடாக சென்று துண்டுபிரசுரங்கள் வழங்கி, கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் ஒலிப்பெருக்கி மூலமாகவும் கிராமங்களில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
காய்கறிகள் விற்பனை
மேலும் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் 522 வாகனங்களில் கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு நேரடியாக காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணியில் 522 மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதன்மூலம் அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 120 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்களுக்கு அவர்கள் இருக்கும் வீட்டுக்கே நேரடியாக சென்று காய்கறிகள் மற்றும் பழங்கள் வழங்கப்படுவதால் அவர்கள் வெளியில் செல்வது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இதனால் நோய் பரவுதலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆய்வு
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள குக்கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம் மூலம் தினமும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.235 வீதம், வாரம் ஒருமுறை அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதன்மூலம் அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டம் முழுவதும் நடைபெறும் இந்த பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
Related Tags :
Next Story