துர்நாற்றத்துடன் புகை, கரித்துகள்கள் வெளியேறுவதை கண்டித்து சாலை மறியல்


துர்நாற்றத்துடன் புகை, கரித்துகள்கள் வெளியேறுவதை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 27 May 2021 7:10 PM GMT (Updated: 27 May 2021 7:10 PM GMT)

பெரம்பலூர் எரிவாயு தகன மேடையில் இருந்து துர்நாற்றத்துடன் கரும்புகை, கரித்துகள்கள் வெளியேறுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்:

மூச்சுத்திணறல்
பெரம்பலூரில் ஆத்தூர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு தகன மேடை உள்ளது. தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களும், அந்த தகன மேடையில் எரியூட்டப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று 2-வது அலையின் காரணமாக நவீன எரிவாயு மேடையில் பொதுமக்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல், இறந்தவர்களின் உடல்கள் இலவசமாக தகனம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரம்பலூர் நவீன எரிவாயு தகன மேடையில் தினமும் ஏராளமான சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சடலத்தை எரியூட்டும்போது எரிவாயு தகன மேடையில் இருந்து துர்நாற்றத்துடன் கரும்புகை அதிகளவு வெளியேறி வருகிறது. அந்த கரும்புகையில் இருந்து கரித்துகள்கள் காற்றில் பறந்து அருகே உள்ள 4-வது வார்டுக்கு உட்பட்ட ஜமாலியா நகர் குடியிருப்பு பகுதியில் விழுகிறது. இதனால் அந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களால் சரியாக சுவாசிக்க முடியாமல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தனர்.
சாலை மறியல்
மேலும் எரிவாயு தகன மேடையில் இருந்து வெளியேறும் கரித்துகள்கள் வீட்டின் உள்ளேயும், பாத்திரங்கள் மீதும் படிவதால் பொதுமக்களால் சரியாக சமைத்து கூட சாப்பிட முடிவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜமாலியா நகர் பொதுமக்கள் நேற்று காலை திடீரென்று நவீன எரிவாயு தகன மேடை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள் நவீன எரிவாயு தகன மேடையில் மின்சாரத்தின் மூலம் சடலங்களை எரியூட்ட வேண்டும். இல்லையென்றால் எரிவாயு தகன மேடையை குடியிருப்பு இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும், என்றனர்.
கரித்துகள்கள் பறப்பதை தடுக்க...
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம், தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் இந்த நவீன எரிவாயு தகன மேடையில் அதிகளவு சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்படுவதால் எரிவாயு தகன மேடையில் குறைந்த அளவு சடலங்களை எரியூட்டவும், அதிகளவு கரும்புகை வெளியேறுவதையும், கரித்துகள்கள் காற்றில் பறப்பதையும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story