சென்னை எழும்பூர் கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி; போலி பணி நியமன ஆணை தயாரித்து கொடுத்தவர் கைது
சென்னை எழும்பூர் கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக போலியான பணி நியமன ஆணையை கொடுத்து ரூ.3½ லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
எழும்பூர் கோர்ட்டு புகார்
சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு தலைமை எழுத்தர் குட்டியப்பன் எழும்பூர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
எழும்பூர் கோர்ட்டு வேலைக்கு போலியான பணி நியமன ஆணையுடன், அம்பத்தூர் வரதராஜபுரத்தைச் சேர்ந்த சுதர்சன் (வயது 35) என்பவர் வந்தார். அவர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதுதொடர்பாக, எழும்பூர் உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மேற்பார்வையில், எழும்பூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சுதர்சனிடம் இது பற்றி விசாரித்த போது, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர்தான், ரூ.3½ லட்சம் பணம் வாங்கிக்கொண்டு பணி நியமன ஆணையை கொடுத்ததாக தெரிவித்தார்.
ராஜசேகர் கைது
போலீசார் ராஜசேகரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் எழும்பூர் கோர்ட்டில், எக்சாமினர் என்ற வேலைக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆள் எடுத்தனர். 3 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். அது தொடர்பான பணி நியமன ஆணை நகலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள மாஜிஸ்திரேட்டு கையெழுத்தை போலியாக போட்டு, உண்மையான பணி நியமன ஆணைபோல கொடுத்து, ரூ.3½ லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக தெரிவித்தார்.அதன் பேரில் ராஜசேகர் கைது செய்யப்பட்டார். அவர் இதுபோல ஏராளமான பேர்களிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story