பிரமாண பத்திரத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்து தேர்தலில் வெற்றி: மைசூரு மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து ருக்மணி மாதேகவுடாவை நீக்க உத்தரவு; கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி


பிரமாண பத்திரத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்து தேர்தலில் வெற்றி: மைசூரு மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து ருக்மணி மாதேகவுடாவை நீக்க உத்தரவு; கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 28 May 2021 7:32 AM IST (Updated: 28 May 2021 7:32 AM IST)
t-max-icont-min-icon

பிரமாண பத்திரத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்து தேர்தலில் வெற்றிபெற்றது நிரூபணமானதால் மைசூரு மாநகராட்சி மேயர் பதவியில் இருந்தும், கவுன்சிலர் பதவியில் இருந்தும் ருக்மணி மாதேகவுடாவை நீக்க கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மைசூரு மாநகராட்சி மேயர்

மைசூரு மாநகராட்சி மேயராக இருந்து வருபவர் ருக்மணி மாதேகவுடா. ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர் மைசூரு மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டபோது தனது பிரமாண பத்திரத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கவுன்சிலர் தேர்தலில் ருக்மணி மாதேகவுடாவை எதிர்த்து போட்டியிட்ட ரஜனி அன்னய்யா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடக ஐகோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்தபோது ருக்மணி மாதேகவுடா மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால், அவரை கவுன்சிலர் பதவியில் இருந்தும், மைசூரு மாநகராட்சி மேயர் பதவியில் இருந்தும் நீக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதன்காரணமாக ருக்மணி மாதேகவுடா மேயர் பதவியையும், கவுன்சிலர் பதவியையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்ப்பு ருக்மணி மாதேகவுடா மேல்முறையீடு செய்தார். இருப்பினும் அவருக்கு எதிராகத்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில்...

மைசூரு மாநகராட்சி மேயரின் தற்போதைய பதவிக்காலம் இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. அடுத்த ஆண்டு மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைபெறும் வரை துணை மேயரே, மேயராக கூடுதல் பொறுப்பு வகித்து ஆட்சி நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ருக்மணி மாதேகவுடா கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்து இருக்கிறார்.


Next Story