பல்லாரி ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் வழங்கும் முடிவு நிறுத்தி வைப்பு; கர்நாடக மந்திரிசபை கூட்டத்திற்கு பின்பு மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
பல்லாரி ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் வழங்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று கர்நாடக மந்திரிசபை கூட்டத்திற்கு பின்பு போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
அரசு நிலம் கொடுக்கும்
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பல்லாரி ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும் முந்தைய மந்திரிசபையின் கூட்ட முடிவு நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்த நிறுவனத்திற்கு நிலம் கொடுப்பதை தற்போதைக்கு அமல்படுத்த மாட்டோம்.கால்நடை, மீன்வளத்துறை சார்பில் ஹாவேரி மாவட்டத்தில் ரூ.90 கோடியில் அல்ட்ரா பால் பாக்கெட் உற்பத்தி மையம் அமைக்கப்படுகிறது. இது அரசு-தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படும்.
பணி நியமன தேர்வுகர்நாடக மின்சார வாகன உற்பத்தி தொழில் கொள்கைக்கு அனுமதி அளித்துள்ளோம். இதில் தொழில் நிறுவனங்களுக்கு சில முக்கியமான சலுகைகளை கொடுக்கிறோம். இந்த கொள்கைப்படி ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். பணி நியமன தேர்வு முறைகேடுகள் தொடர்பாக கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்குவது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹாசன் மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்புக்கான இடங்களை அதிகரிக்க அனுமதி அளிக்கபட்டுள்ளது. இதற்கு ரூ.58 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கிராம குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு சிங்கசந்திராவில் ரூ.75 கோடியில் வணிக வளாகம் கட்டப்படுகிறது.
குடியிருப்பு திட்டம்கலபுரகியில் நகர வளர்ச்சித்துறை சார்பில் ரூ.63 கோடியில் குடியிருப்பு திட்டம் அமல்படுத்தப்படும். நீர்ப்பாசனத்துறை சார்பில் சன்னபட்டணாவில் 5 ஏரிகள், ஹாசனில் ரூ.144 கோடியில் 9 ஏரிகள், பூங்காவை மேம்படுத்த அனுமதி அளித்துள்ளோம். புதிய அணை கட்டுவதால், அணையின் மட்டத்தை உயர்த்துவதால் நீரில் மூழ்கும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜயாப்புரா, சிவமொக்கா, சுராப்புரா, ஒன்னாளியில் குடிநீர் திட்டம் மற்றும் சன்னகிரி, சிக்கமகளூருவில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.772 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்லாரி ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் அந்த தடை நீக்கப்படுமா? என்பதை இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது. இது தொடர்பாக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இன்னொரு உதவி திட்டம்கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விவாதித்தோம். குழந்தைகளை கொரோனா தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனி வார்டு மற்றும் ஐ.சி.யு. அமைக்க எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார். கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய இன்னொரு உதவி திட்டத்தை அறிவிப்பது குறித்து எடியூரப்பா முடிவு செய்வார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. வருகிற 30-ந் தேதி மத்திய அரசு ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் பிறகு எந்த மாதிரியான உதவிகளை வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
மந்திரி ஆனந்த்சிங் எதிர்ப்புகுமாரசாமி தலைமையில் நடந்த கூட்டணி ஆட்சியில் ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது பா.ஜனதா நிலம் ஒதுக்க முடிவு செய்ததற்கு ஜனதாதளம், காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பா.ஜனதா ஆட்சியில் மந்திரியாக உள்ள ஆனந்த்சிங்கை ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த எதிர்ப்பின் எதிரொலியாக தான் நிலம் வழங்கும் முடிவை அரசு நிறுத்தி வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.