கருகிய வெங்காய பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள்


கருகிய வெங்காய பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள்
x
தினத்தந்தி 28 May 2021 6:11 PM IST (Updated: 28 May 2021 6:11 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் கருகிய வெங்காய பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

போடிப்பட்டி
 உடுமலை பகுதியில் கருகிய வெங்காய பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குற்றச்சாட்டு
உடுமலை பகுதியில் தற்போது அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தரமற்ற விதைகளால் பல இடங்களில் சின்ன வெங்காய பயிர்கள் கருகியதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். அதிலும் விதை விற்பனை நிலையங்களில் வாங்கிய விதைகள் மட்டுமல்லாமல் தோட்டக்கலைத்துறை மூலம் இலவசமாக வழங்கப்பட்ட விதைகள் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும் கருகி வீணாகி விட்டதாக விவசாயிகள் வைத்த குற்றச்சாட்டு அதிர்ச்சியளித்தது. 
இது குறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களுக்கு உடுமலை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
விழிப்புணர்வு
ஆய்வின் முடிவில் அதிகாரிகள் கூறியதாவது
சின்ன வெங்காயம் உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான பயிர்களில் சீசனுக்குத்தகுந்த ரகங்கள் உருவாக்கப்படுகிறது. அதன்படி கோடையில் அதிக வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய ரகங்களும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்கினாலும் பாதிக்கப்படாத ரகங்கள் என்று சிறப்புக்கவனம் எடுத்து விதை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இதுகுறித்து விதை விற்பனையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் மழைக்காலத்துக்கு உகந்த ரகங்களை கோடையில் பயிர் செய்துள்ளனர்.
இதுவே பயிர் பாதிப்புக்கு காரணமாக இருந்துள்ளது. இனிவரும் காலங்களில் விதை விற்பனையாளர்களுக்கு பருவத்துக்கேற்ற ரகங்களைத் தேர்வு செய்து விற்பனை செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதுபோல விவசாயிகளும் தாங்கள் பயிரிடப்போகும் ரகம் குறித்து விதைப்பதற்கு முன்பே தோட்டக்கலைத்துறையினரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வதன் மூலம் இதுபோன்ற இழப்புகளைத்தவிர்க்க முடியும்
 இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story