முகாம்களை அதிகப்படுத்த அறிவுரை
திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆய்வுக்கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக கூடுதல் மேலாண்மை இயக்குனர் வினித் முன்னிலை வகித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், தாராபுரம் சப்கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், அவசர சிகிச்சை பிரிவு, வெண்டிலட்டர் வசதி ஆகிய விவரங்கள் கேட்கப்பட்டது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளவேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்களின் எண்ணிக்கை மற்றும் எவ்வளவு தடுப்பூசி இருப்பில் உள்ளது போன்ற விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டது. தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி பொது மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
காய்ச்சல் கண்டறியும் முகாம்
கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் அதிகளவில் நடத்த வேண்டும். அதுபோல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களின் விவரங்களும் கேட்கப்பட்டது.
கொரோனா பராமரிப்பு மையம் மற்றும் அங்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
-
Related Tags :
Next Story