வாணியம்பாடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்
வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள், 1,000 லிட்டர் பாக்கெட் சாராயத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பறிமுதல் செய்தார்.
வாணியம்பாடி-
திடீர் சோதனை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வீட்டை அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வாடகைக்கு எடுத்து மதுபான பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று போலீஸ்சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், 25 பேர் கொண்ட குழு மேட்டுப்பாளையம் பகுதியில் ராஜ்குமார் வீட்டை சுற்றிவளைத்து திடீர் சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையில் சுமார் 1,000 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் இருந்தது.
5,000 மதுபாட்டில்கள்
மற்றொரு அறையில் சோதனை செய்தபோது அங்கு கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் மதுபான பாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் பெட்டி, பெட்டியாக இருந்தது. மொத்தம் 5,000 மதுபாட்டில்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.
சாராயத்தை கைப்பற்றி போலீசார் அழித்தனர். மது பாட்டில்களை வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு ஆட்டோக்கள் மூலம் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ராஜ்குமார் மற்றும் அவருடன் சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை பிடிக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story