நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கிய ஆசிரியர்கள்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் களமிறங்கி உள்ளனர். கட்டுப்பாட்டு அறைக்கு 40 பேர் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையினர் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கொரோனா பரவலை தடுப்பது, தடுப்பூசி செலுத்துவது, கொரோனா பரிசோதனை, தொற்று கண்டறியப்பட்ட இடங்களை தனிமைப்படுத்துவது, பாதுகாப்பு விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து நீலகிரியில் கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அவர்கள் நேரடியாக பணியில் ஈடுபடுத்தப்படாமல் கொரோனா கட்டுப்பாட்டு அறையில்(வார் ரூம்) பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அங்கு ஆசிரியர்கள் 40 பேர் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டுப்பாட்டு அறை சிறிய அறையில் இயங்கி வந்தது. தற்போது ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதால் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு உறுதியான நபர்களை செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறார்கள், உடல் நிலை எவ்வாறு உள்ளது என்று விசாரிக்கின்றனர்.
கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் வரவழைப்பது, ஆக்சிஜன் உதவி தேவைப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பூரண குணமடைந்து வீடு திரும்புகிறவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story