ஆக்சிஜன் படுக்கை கொரோனா சிகிச்சை மையத்தில் 18 நோயாளிகள் அனுமதி
ஆக்சிஜன் படுக்கை கொரோனா சிகிச்சை மையத்தில் 18 நோயாளிகள் அனுமதி
கோவை
கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் படுக்கை கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது. அங்கு 18 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பரவல்
தமிழக அளவில் கோவையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தினசரி 4,500 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வழிகின்றன.
தொற்று ஏற்பட்ட பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் தேவைப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 3,839 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன.
இதில் அரசு ஆஸ்பத்திரியில் 700 படுக்கைகளும், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 450 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன.
இந்த படுக்கைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. இதன் காரணமாக புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட பஸ் நிறுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு தற்காலிகமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆக்சிஜன் படுக்கை வசதி
இந்த நிலையில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்காக கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.
தற்போது அந்த கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இங்கு தற்போது 18 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது
அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து படுக்கைகளும் நோயாளிகளால் நிரம்பி விட்டன. ஒருவர் குணமடைந்தால் மட்டுமே மற்றவரை அனுமதிக்க முடியும் நிலை உள்ளது. எனவே தான் கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.
இது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மையத்தில் 2 டாக்டர்கள் 4 செவிலியர்கள் பணியில் உள்ளனர். நோயாளிகள் வந்து கொண்டே இருக்கின்றனர். யாருக்கும் சிகிச்சை இல்லை என கூறாமல், அனைவருக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story