சின்னசேலம் அருகே போலி டாக்டர் கைது
சின்னசேலம் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் யூ-டியுப் சேனலில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னசேலம்
ரகசிய தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கூகையூர் கிராமத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஒருவர் அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக சப்-கலெக்டர் ஸ்ரீகாந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சதீஷ் உத்தரவின் பேரில் சின்னசேலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதியழகன் தலைமையில் நயினார்பாளையம் மருத்துவ அலுவலர் டாக்டர் அபன்யா, சுகாதார ஆய்வாளர்கள் சீனுவாசன், மாயக்கண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோரை கொண்ட குழுவினர் கூகையூர் கிராமத்தில் உள்ள கிளினிக்கில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கிளினிக்குக்கு சீல்
அப்போது ஒருவர், 5 வயது குழந்தைக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்ததை அதிகாரிகள் குழுவினர் பார்த்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே கிராமத்தை சேர்ந்த பொற்செழியன்(வயது 60) என்பதும், பி.இ. எம்.எஸ்.(எலக்ட்ரோபதி) படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த கிளினிக்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கைது
பின்னர் இந்த சம்பவம் குறித்து மருத்துவ அலுவலர் அபன்யா கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொற்செழியனை கைது செய்தனர்.
கைதான பொற்செழியன் யூ-டியுப் சேனல் தொடங்கி, அதில் சாப்பாட்டு ராமன் என்று பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story