விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பெண்கள் உள்பட 8 பேர் சாவு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு 4 பெண்கள் உள்பட 8 பேர் இறந்தனர். மேலும் 558 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்
கொரோனாவுக்கு 8 பேர் சாவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 31,956 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 226 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 27,541 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 4,189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கே.கே. நகரை சேர்ந்த 55 வயதுடைய நபர், செஞ்சி அருகே தேவதானம்பேட்டையை சேர்ந்த 55 வயதுடைய பெண், விழுப்புரம் அருகே சிறுவள்ளிக்குப்பத்தை சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி, செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே அரியலூரை சேர்ந்த 40 வயதுடைய பெண், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரத்தை சேர்ந்த 69 வயதுடைய முதியவர், வளவனூரை சேர்ந்த 51 வயதுடைய ஆண், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்த 75 வயதுடைய முதியவர், மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஆக மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
558 பேருக்கு தொற்று
மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 558 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,514 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,781 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 4,499 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story