வீட்டில் பதுக்கிய நாட்டு வெடிகுண்டு வெடித்தது
சேத்தூர் அருகே வீட்டில் பதுக்கிய நாட்டு வெடிகுண்டு வெடித்தது.
தளவாய்புரம்,
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர், கண்ணன் என்ற அன்பழகன் (வயது 30). இவர் விவசாய கூலி தொழிலாளி.
இந்த நிலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் திடீரென பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதுபற்றி அப்பகுதியில் உள்ளவர்கள் சேத்தூர் புறநகர் போலீசாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி, ராஜபாளையம் தாசில்தார் ெரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இதனையடுத்து நடத்திய விசாரணையில் அன்பழகன் சில வாரங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மான்களை வேட்டையாடிய வழக்கில் தொடர்பு உள்ளவர் என்றும், இவரை ராஜபாளையம் வனத்துறையினர் தேடி வருவதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அன்பழகனை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story