நெல்லை மாநகரில் நடமாடும் வாகனம் மூலம் 480 டன் காய்கறி விற்பனை


நெல்லை மாநகரில்  நடமாடும் வாகனம் மூலம் 480 டன் காய்கறி விற்பனை
x
தினத்தந்தி 29 May 2021 1:23 AM IST (Updated: 29 May 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகரில் நடமாடும் வாகனங்கள் மூலம் 480 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

நெல்லை:
நெல்லை மாநகரில் நடமாடும் வாகனங்கள் மூலம் 480 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நடமாடும் வாகனங்கள்

கொரோனா பரவலை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில், பொதுமக்களின் வசதிக்காக சமூக விலகலை பின்பற்றும் விதமாக மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடமாடும் காய்கறி விற்பனை சேவை வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி தினமும் அத்தியாவசியமாக தேவைப்படும் காய்கறி பொருட்களை வீடு தேடி வந்து விற்பனை செய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் 339 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மண்டலத்தில் 122, மேலப்பாளையத்தில் 120, நெல்லை மண்டலத்தில் 57, தச்சநல்லூர் மண்டலத்தில் 40 என மொத்தம் 339 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

480 டன் விற்பனை

நெல்லை மாநகரில் இதுவரை 480 டன் அளவுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் 4 சக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள் செல்ல முடியாத குறுகலான சந்து பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை சேவையும், கூடுதல் வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் மாநகராட்சி மூலம் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் நடமாடும் காய்கறி விற்பனை சேவை வாகனங்களை அவ்வப்போது கண்காணித்து வருவதுடன், வேளாண்மை துறை மற்றும் உழவர் உற்பத்திக்குழு மூலம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் காய்கறிகள் விற்கப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story