கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி மேலும் 580 பேருக்கு தொற்று


கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி மேலும் 580 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 29 May 2021 1:42 AM IST (Updated: 29 May 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 580 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர், 

188 பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 25 ஆயிரத்து 706 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த 1.4.2021 முதல் நேற்று முன்தினம் வரை மட்டும் 57 நாட்களில் கொரோனாவால் 20 ஆயிரத்து 434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மார்ச் மாதத்துடன் முடிந்த கடந்த ஓராண்டில் 291 பேர் பலியான நிலையில், அதன் பிறகு மட்டும் 188 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் பாதியாக உள்ளது. அதாவது மார்ச் மாதம் வரை 25 ஆயிரத்து 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கடந்த 2 மாதத்தில் 12 ஆயிரத்து 951 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர்.

580 பேருக்கு தொற்று

இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 580 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதில் சென்னை மற்றும் திருப்பூரில் இருந்து கடலூர் மாவட்டம் வந்த 3 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு காத்திருந்த 4 பேருக்கும், சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 49 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 524 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேர் பலியாகி உள்ளனர்.

சிகிச்சை

அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மங்களூரை சேர்ந்த 37 வயது நபர் பெரம்பலூர் மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 75 வயது முதியவர் மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 40 வயது நபர் சென்னை தனியார் மருத்துவமனையிலும், கம்மாபுரத்தை சேர்ந்த 69 வயது முதியவர் செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனையிலும், நல்லூரை சேர்ந்த 73 வயது முதியவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், குமராட்சியை சேர்ந்த 52 வயது நபர் மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 56 வயது பெண் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 7 பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
நேற்று மட்டும் 739 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 447 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், 972 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story