சேலம் மாநகரில் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை


சேலம் மாநகரில் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை
x
தினத்தந்தி 29 May 2021 4:29 AM IST (Updated: 29 May 2021 4:29 AM IST)
t-max-icont-min-icon

நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை

சேலம், மே.29-
சேலம் மாநகரில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும், காய்கறி சந்தைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அஸ்தம்பட்டி பகுதியில் நேற்று நடமாடும் வாகனங்களில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முழு ஊரடங்கு போடுவதற்கு முன்பாக ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது கத்தரிக்காய் மட்டுமின்றி பல்வேறு வகையான காய்கறி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு முருங்கைக்காய் ரூ.10-க்கு விற்கப்படுகிறது. பாகற்காய், புடலங்காய், தக்காளி, மாங்காய், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகளிடம் பொதுமக்கள் கேட்டால், வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதால் காய்கறி விலை சற்று உயர்ந்துள்ளது, என தெரிவித்தனர்.
சேலத்தில் காய்கறி விலைகளை தொடர்ந்து ஆப்பிள், மாம்பழம், மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை உள்ளிட்ட பழங்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காய்கறி மற்றும் பழங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அதோடு உழவர்சந்தை நிர்ணயம் செய்யும் விலைகளில் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும், என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story