விழுப்புரம் மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் விற்கப்படும் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் - கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் விற்கப்படும் காய்கறிகளுக்கு வேளாண்மைத்துறை விலை நிர்ணயம் செய்துள்ளதோடு கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடந்த 24-ந் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் நலனை பேணுகிற வகையில் காய்கறி, பழ வகைகளை வீடு தேடிச்சென்று தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை வாகனங்களில் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 659 வாகனங்கள் மூலமாக வீதி, வீதியாக கொண்டு சென்று பொதுமக்களின் வீட்டு வாசலிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு வாகனங்கள் மூலம் விற்கப்படும் காய்கறிகள் விலை உயர்ந்து காணப்படுவதாகவும், வாகனங்களில் விற்பனை செய்பவர்கள் தன்னிச்சையாக காய்கறிகளை இருமடங்காக விலை உயர்த்தி விற்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. மேலும் ஒவ்வொரு வாகனங்களிலும் காய்கறிகளின் விலைப்பட்டியலை மக்களுக்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பொதுமக்களின் புகாரை தொடர்ந்து வாகனங்கள் மூலமாக விற்கப்படும் காய்கறிகளின் விலை விவரம் அடங்கிய பட்டியலை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த விலைப்பட்டியலை வாகனங்களில் ஒட்டவும் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி கத்தரிக்காய் கிலோ ரூ.40-ம், தக்காளி கிலோ ரூ.15-ம், பெரிய வெங்காயம் ரூ.20, ரூ.25, ரூ.30-ம், உருளைக்கிழங்கு ரூ.40-ம், வெண்டைக்காய் ரூ.40-ம், முட்டைக்கோஸ் ரூ.30-ம், பீன்ஸ் ரூ.60, ரூ.80-ம், முள்ளங்கி ரூ.40-ம், கேரட் ரூ.50-ம், தேங்காய் ரூ.50-ம், வாழைக்காய் ரூ.40-ம், சவ்சவ் ரூ.40-ம், சுரைக்காய் ரூ.20-ம், பூசணிக்காய் ரூ.20-ம், கொத்தவரை ரூ.40-ம், புடலங்காய் ரூ.40-ம், பீர்க்கங்காய் ரூ.60-ம், முருங்கைக்காய் ரூ.60-ம், மாங்காய் ரூ.40-ம், எலுமிச்சை ரூ.150-ம், பீட்ரூட் ரூ.45-ம், கருணைக்கிழங்கு ரூ.50-ம், இஞ்சி ரூ.70-ம், அவரைக்காய் ரூ.65-ம், குடைமிளகாய் ரூ.50-ம், பச்சை மிளகாய் ரூ.60-ம், பரங்கிக்காய் ரூ.20-ம், பிடிகருணை ரூ.50-ம், மரவள்ளி ரூ.35-ம், ஒரு வாழைப்பூ ரூ.15-ம், சேப்பங்கிழங்கு ரூ.40-ம் என்று விலை நிர்ணயம் செய்து அதற்கான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு சில நாட்களில் காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் புதிய விலை பட்டியலை வாகனங்களில் ஒட்டுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அரசு நிர்ணயித்த விலை படி காய்கறி விற்கப்படுகிறதா என கண்காணிக்க அந்தந்த வட்டார வேளாண் உதவி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த விலையின் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ரமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story