பழனி அரசு பள்ளியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
பழனி அரசு பள்ளியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுவதை இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
பழனி:
பழனி பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் பழனி அரசு மருத்துவமனை, பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் உள்ள சிகிச்சை மையங்களில் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பழனி அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்கு முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. ஆனந்தி ஆகியோர் நகராட்சி பள்ளி பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் எம்.எல்.ஏ. கூறுகையில், ஒட்டன்சத்திரம், பழனியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் கூடுதல் சிகிச்சை மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அனைவரும் ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். அதுபோல அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
இதையடுத்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சிகிச்சை மைய தொடக்க பணிகள், அங்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான வசதிகள் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆர்.டி.ஓ ஆனந்தி, தாசில்தார் வடிவேல் முருகன், நகராட்சி ஆணையர் நாராயணன் (கூடுதல் பொறுப்பு) பழனி அரசு மருத்துவமனை அலுவலர் டாக்டர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
Related Tags :
Next Story