ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2020 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்- போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2020 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி, மே:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2020 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு கடந்த 24-ந்தேதி முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியது. எனினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததால் மேலும் ஒரு வார காலம் முழு ஊரடங்கை நீட்டிப்பு செய்தது.
இந்த ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
வாகன சோதனை
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே போலீசார் வாகன சோதனை செய்வதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி நகரத்தில் 22 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 64 இடங்களிலும் வாகன சோதனை நடந்து வருகிறது. மேலும் தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 24-ந்தேதி முதல் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய இதுவரை 2020 இருசக்கர வாகனங்கள், 34 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 21 ஆட்டோக்கள் ஆகியவை மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வார காலம் அமலில் இருக்கும். எனவே பொதுமக்கள் யாரும் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். இதன் மூலம் கொரோனா தொடர்பு சங்கிலியை தடுத்து விடலாம். இந்த ஒரு வார காலத்திற்கு பொதுமக்கள் அரசுக்கும், காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி நகர துணை சூப்பிரண்டு கணேஷ் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story