2 மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் கடலூர் அருகே பரபரப்பு


2 மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் கடலூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 29 May 2021 10:27 PM IST (Updated: 29 May 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே 2 மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கக் கோரி பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 


கடலூர் அருகே உள்ள வடக்கு ராமாபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வசதியாக, அதே பகுதியில் ரேஷன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ரேஷன் கடையில் பணிபுரிந்து வரும் ஊழியருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த ரேஷன் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த நிலையில் 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று ரேஷன் கடை ஊழியர், கடையை திறந்து பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்தார். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு 2 மாதத்திற்கு உரிய பொருட்களை வழங்க வேண்டும் என கூறினர். அதற்கு ஊழியர் இந்த மாதத்திற்கான பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் திடீரென கடை அருகில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதற்கிடையே நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த மருத்துவ முகாமை ஆய்வு செய்வதற்காக அவ்வழியாக சென்ற மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதை பார்த்து தனது காரை நிறுத்தினார். பின்னர் அவர் காரில் இருந்து இறங்கி சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் தங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் 2 மாதத்திற்கு உரிய பொருட்களும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

அதற்கு கலெக்டர் 2 மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story