வீடு, வீடாக தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு


வீடு, வீடாக தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 29 May 2021 10:46 PM IST (Updated: 29 May 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத வர்கள் யார்? என்று வீடு, வீடாக தன்னார்வலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு கொரோனா அறிகுறி தென்பட்டு 90-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக தன்னார்வலர்கள் 34 பேர் நியமிக்கப்பட்டு, நகராட்சி முழுவதும் வீடு, வீடாக சென்று கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஊட்டி அன்பு அண்ணா காலனி, மஞ்சனக்கொரை, ஜல்லிக்குழி, காந்தல், கஸ்தூரிபாய் காலனி, இந்திரா நகர் ஆகிய இடங்களில் தன்னார்வலர்கள் தீவிரமாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர், சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் உள்ளதா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருக்கிறதா, கர்ப்பிணிகள் உள்ளனரா என்று கேட்டறிகின்றனர். 

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா, செலுத்தி இருந்தால் முதல் டோசா அல்லது 2-வது டோசா என்ற விவரம் சேகரிக்கப்படுகிறது. முதல் கட்டமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் கூறியதாவது:- 
முதல் நாளில் 436 வீடுகளில் 1,511 பேரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வீடு, வீடாக சென்று தன்னார்வலர்கள் மேற்கொள்ளும் கள ஆய்வின்போது, யாருக்கேனும் அறிகுறிகள் தென்பட்டால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் தொற்று பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்களா என்றும் விசாரிக்கப்படுகிறது. இதற்காக 34 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சிமீட்டர், கையுறைகள், கண்ணாடி, முககவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து வீடு, வீடாக களஆய்வு மேற்கொள்வதன் மூலம் தொற்று பரவலை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story