கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் முறையான மருத்துவம் படிக்காத போலி டாக்டர்கள் சிலர் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் முறையான மருத்துவம் படிக்காத போலி டாக்டர்கள் சிலர் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
போலி டாக்டர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகஅளவில் உள்ளது. குறிப்பாக தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா 2-வது பரவலை பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களிலும், நகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் போலி டாக்டர்கள் தங்களின் அனுபவ மருத்துவ அறிவை பயன்படுத்தி சர்வசாதாரணமாக சிகிச்சை என்ற பெயரில் மக்களை பதம்பார்த்து வருகின்றனர்.
சிலர் கொரோனா அச்சம் காரணமாக பரிசோதனை செய்ய தயங்கி தங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்களை தேடி சென்று சிகிச்சை பெறுகின்றனர்.
குற்றச்சாட்டு
இதுபோன்றவர்களை போலி டாக்டர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிகிச்சை அளித்து அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். இதனால் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் மருத்துவம் பயிலாத பிற மருத்துவம் சார்ந்த இதர பயிற்சி பெற்றவர்கள் என அனைவரும் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் கைராசி டாக்டர்களாகி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முறையான மருத்துவம் படிக்காமல் இந்த நோய்க்கு இந்த மருத்துவம் என்று அவர்கள் அறிந்த அனுபவத்தின் அடிப்படையில் பக்கவிளைவுகள் உள்ள அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை கூட சர்வசாதாரணமாக கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வலிநிவாரணி, உயிர்காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவற்றை மாத்திரைகளாகவும், ஊசிகளாகவும் போட்டு மக்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகின்றனர்.
உயிரிழப்பு
இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் தங்களிடம் வருபவர்களுக்கு குளுகோஸ் பாட்டில் போட்டு அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களிடம் ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு சரியாகவில்லை என்றால்தான் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்கின்றனர். அதற்குள் நுரையீரலுக்கு நோய்த்தொற்று சென்று ஆக்சிஜன் குறைந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. தடைசெய்யப்பட்ட அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு தற்போது சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் அதிகஅளவில் ஏற்பட்டுள்ளன.
இதற்கு காரணம் பக்கவிளைவுகள் உள்ள தடைசெய்யப்பட்ட மருந்துகளை போலி டாக்டர்களின் பரிந்துரையின் அடிப்படையில் நோயாளிகள் தங்களின் நோக்கத்திற்கு எடுத்துக்கொண்டது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கோரிக்கை
எனவே, மாவட்ட நிர்வாகம், காவல்துறையுடன் இணைந்து மருத்துவ குழுவினரை அனுப்பி மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி போலி டாக்டர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை தொலைத்துவரும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story