தொகுப்பூதியத்தில் பணியாற்ற டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம்


தொகுப்பூதியத்தில் பணியாற்ற  டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 29 May 2021 10:59 PM IST (Updated: 29 May 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, கூடலூர் அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஊட்டியில் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி கர்ப்பிணிகள், வெளி நோயாளிகள் மற்றும் இதர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கிடையே நீலகிரியில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாதத்துக்கு கூடுதலாக டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாத காலத்துக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை பணிபுரிய சுகாதார பணிகள் துணை இயக்குனர் மூலம் பொது மருத்துவர் (எம்.பி.பி.எஸ்.) தகுதியுடைய மருத்துவ அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும்.

அதன்படி எம்.பி.பி.எஸ். முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்லில் பதிவு செய்து தகுதி உள்ளவர்கள் மாதம் ரூ.60 ஆயிரம் என்ற தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். கல்வி சான்றிதழ், அடையாள அட்டை, மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். 

எனவே விருப்பம் உள்ளவர்கள் ஊட்டியில் சி.டி. ஸ்கேன் மையம் அருகில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தை மேற்கண்ட ஆவணங்களுடன் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 8903216454 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story