பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவன் ‘திடீர்’ சாவு


பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவன் ‘திடீர்’ சாவு
x
தினத்தந்தி 29 May 2021 11:24 PM IST (Updated: 29 May 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். சிகிச்சை சரியாக அளிக்கவில்லை என்று உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். சிகிச்சை சரியாக அளிக்கவில்லை என்று உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காய்ச்சல், வாந்தி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே நரியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுடர்மதி. இவர்களுக்கு அஸ்வின்ராஜ் (வயது 8) ரோஷன் (6) ஆகிய 2 மகன்கள்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சித்குமார் தனது குடும்பத்தினருடன் பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப் பல்லி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்து வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அஸ்வின்ராஜிக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் காய்ச்சலுடன் வாந்தி ஏற்பட்டது. உடனடியாக அஸ்வின்ராஜை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 அப்போது பணியிலிருந்த டாக்டர் பரிசோதனை செய்யாமலேயே அங்கு பணியிலிருந்த செவிலியருக்கு செல்போன் மூலம் ஊசி போட்டு சிகிச்சையளிக்கும்படி கூறியதாக தெரிகிறது. 

சிறுவன் சாவு

பின்னர் காலை 7 மணியளவில் அஸ்வின்ராஜை அவரது பெற்றோர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அஸ்வின்ராஜின் உடல்நிலை மிகவும் மோசமானதால் மீண்டும் காலை 11 மணியளவில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அஸ்வின்ராஜ் பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

உடலை வாங்க மறுத்து போராட்டம்

இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித்குமார் மற்றும் அவரது உறவினர்கள் சிறுவன் அஸ்வின்ராஜை டாக்டர் பரிசோதிக்காமலும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காததாலும் இறந்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, அஸ்வின்ராஜின் பிணத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுமார் 3 மணி நேரம் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர். துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஹேமலதா, பேரணாம்பட்டு தாசில்தார் கோபி, அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி திருஞானம் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் இறந்த அஸ்வின்ராஜின் பிணத்தை பெற்று சென்றனர். 

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட டாக்டரிடம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர், மருத்துவ இணை இயக்குனர் ஹேமலதா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story