பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை லாரியில் கடத்தியவர் கைது மோட்டார்சைக்கிளில் கடத்திய 2 பேரும் சிக்கினர்


பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை லாரியில் கடத்தியவர் கைது மோட்டார்சைக்கிளில் கடத்திய 2 பேரும் சிக்கினர்
x
தினத்தந்தி 29 May 2021 11:24 PM IST (Updated: 29 May 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். அதே போல மத்தூரில் மதுபாக்கெட்டுகள் கடத்திய மேலும் 2 பேரை போலீசார் பிடித்தனர்.

கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். அதே போல மத்தூரில் மதுபாக்கெட்டுகள் கடத்திய மேலும் 2 பேரை போலீசார் பிடித்தனர்.
வாகன சோதனை
கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வையொட்டி மதுக்கடைகள் காலையில் குறிப்பிட்ட நேரம் திறந்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு சரக்கு வாகனங்களில் செல்லக்கூடியவர்களில் சிலர், கர்நாடக மாநில மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து, தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு மதுபாட்டில்கள் வாங்கி வந்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், முனுசாமி, கண்ணன், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு அருகில் உள்ள மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
டிரைவர் கைது
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 38 பெட்டி மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 1,392 குவார்ட்டர் மது பாக்கெட்டுகளும், 432 பிளாஸ்டிக் குவார்ட்டர் மது பாட்டில்களும் இருந்தன. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 640 ஆகும். இதையடுத்து அந்த மது பாட்டில்களையும், கடத்தி வர பயன்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், அந்த லாரியின் டிரைவரான கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள மஞ்சப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் (வயது 24) என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு தாசன்னபுரம் மார்க்கெட் பகுதியில் இருந்து பேரணாம்பட்டு வழியாக காஞ்சீபுரத்திற்கு லாரியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்ததாகவும், அதில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
மத்தூர்
இதே போல மத்தூர் அருகே கண்ணன்டஅள்ளி கூட்டு ரோடு அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 360 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த வினோத் (30) மற்றும் 17 வயது சிறுவன் என்றும், அவர்கள் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு மதுபாக்கெட்டுகளை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாக்கெட்டுகளையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story