கொரோனாவுக்கு தந்தை, தாய், பாட்டியை பறிகொடுத்த 2 சிறுவர்கள் தவிப்பு
கொரோனாவுக்கு தந்தை தாய் பாட்டியை பறிகொடுத்த 2 சிறுவர்கள் தவிப்பு
கோவை
கொரோனாவுக்கு தந்தை, தாய், பாட்டி ஆகியோரை பறிகொடுத்த 2 சிறுவர்கள் தந்தை வழி பாட்டியின் அரவணைப்பில் உள்ளனர்.
மருந்து கடை உரிமையாளர்
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு
கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 45). மருந்து கடை உரிமையாளர். இவருடைய மனைவி ஜெயந்தி (40). இவர்களுடைய மகன் விபின் (15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சாமுவேல் (8) 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.
3 பேர் பலி
இந்த நிலையில் தன்ராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் சேர்ந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 15-ந் தேதி இறந்தார். அவரை உடனிருந்து கவனித்து வந்த அவருடைய மனைவி ஜெயந்திக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர், கணவர் இறந்த 2 நாட்கள் கழித்து 17-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து ஜெயந்தியை உடனிருந்து கவனித்த அவருடைய தாய் பத்மா துரைக்கு (60) தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
அவரும் கடந்த வாரம் கொரோனாவுக்கு பலியானார். ஒரே குடும்பத்தில் பெற்றோர் மற்றும் பாட்டி என 3 பேர் அடுத்தடுத்து இறந்ததால் அந்த சோகத்தை தாங்க முடியாமல் விபின், சாமுவேல் ஆகியோர் கண்ணீருடன் சோகத்தில் தவித்து வருகின்றனர்.
சிகிச்சை பெற வேண்டும்
இந்த நிலையில் தன்ராஜின் தாய் சாரதா (65) தனது பேரக் குழந்தை கள் விபின், சாமுவேல் ஆகியோரை தற்போது பராமரித்து வருகிறார்.
இது குறித்து சாரதா கண்ணீர் மல்க கூறும்போது கொரோனாவால் எங்களது குடும்பம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. 2 குழந்தைகளை யும் என்ஜினீயராக்க என் மகன் கனவு கண்டான்.
அதை எப்படி நிறைவேற்றுவது என்று தெரிய வில்லை. கொரோனா பாதிப்பு ஏற்பட் டால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். தாமதம் செய்தால் மோசமான சோகத்தை ஏற்படுத்தி விடும் என்றார்.
பெற்றோரை இழந்த விபின், சாமுவேல் ஆகியோர் கூறுகையில் கொரோனா சிகிச்சைக்கு சென்ற பெற்றோர் திரும்பி வர வில்லை. அவர்களை இழந்து நிற்கும் எங்களின் உயர்கல்விக்கு யாராவது உதவ வேண்டும் என்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் 2 சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story