சங்கரன்கோவிலில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
சங்கரன்கோவிலில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வீட்டில் தூக்குப்போட்டு...
சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் ராமர் மனைவி மாரியம்மாள் (வயது 56). இவர் நேற்று காலை தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சங்கரன்கோவில் டவுன் போலீசார் விரைந்து சென்று, மாரியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சங்கரன்கோவில் சபாபதி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி கனி அம்மாள் (33). இவர் கடந்த 19-ந்தேதி தலைமுடிக்கு பயன்படுத்தும் ரசாயனத்தை (ஹேர்டை) எடுத்து குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
உடனே அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் கனி அம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் சாவு
சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜா (20). இவர் போதைக்காக ஒயிட்னர் குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. அவர் அதை குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து உள்ளார்.
இதை அவரது பெற்றோர் கண்டித்து உள்ளனர். மேலும் ராஜா குறித்து அவருடைய தந்தை முருகன், அவருக்கு தெரிந்தவர்களிடமும், போலீசாரிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜா சம்பவத்தன்று வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே முருகனை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த முருகன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, கக்கன்நகரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ராஜாவின் தாயார் திருமலை வீட்டு மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு ராஜா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருமலை கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு உறவினர்கள் அங்கு ஓடி வந்து, ராஜாவை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்தும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story