சூறாவளி காற்றால் 250 ஏக்கர் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன


சூறாவளி காற்றால் 250 ஏக்கர் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன
x
தினத்தந்தி 29 May 2021 9:46 PM GMT (Updated: 29 May 2021 9:46 PM GMT)

ஆண்டிமடம் அருகே சூறாவளி காற்று, மழையால் 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆண்டிமடம்:

மரங்கள் சாய்ந்தன
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அகரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் முந்திரி சாகுபடியை பிரதான பயிராக சாகுபடி செய்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் காலங்காலமாக முந்திரி சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அகரம் கிராமத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக முந்திரி மரங்கள் வேரோடும், முறிந்தும் சாய்ந்தன. இதை பார்த்த விவசாயிகள் மிகவும் மனவேதனை அடைந்தனர். இது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நஷ்டம்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள 75-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடைய முந்திரி, மா, பலா, வேம்பு உள்ளிட்ட மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் சேதம் அடைந்தது. குறிப்பாக முந்திரி மரங்களே அதிக அளவில் சாய்ந்துள்ளன. இதில் ஒவ்வொரு மரமும் 40 முதல் 80 வருடங்கள் பழமை வாய்ந்த மரங்கள் ஆகும். 5 தலைமுறைகளை தாண்டி முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ஒரு பட்டத்திற்கு 10 மூட்டை வரை முந்திரி காய்க்கும். தற்போது மரங்கள் சாய்ந்ததால், ஒரு வருடத்திற்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
புதிதாக ஒட்டுரக முந்திரி மரங்களை வைத்தால் கூட அது மரமாக 5 வருடங்கள் பிடிக்கும். இந்த 5 வருடங்கள் கழித்துதான் முன்பிருந்த மகசூலை பார்க்க முடியும். வருடத்திற்கு ரூ.3 லட்சம் என்றால் 5 வருடங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இழப்பீட்டு தொகை
மேலும் இப்பகுதி விவசாயிகள் முந்திரி சாகுபடியை மட்டுமே நம்பி உள்ளனர். வேறு எந்த விவசாயமும் செயவதற்கு வழி இல்லை. எனவே விவசாயிகளின் நிலங்களை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story