மளிகை, காய்கறி-பழங்கள் விற்பனை வாகனங்கள் வீட்டின் அருகே செல்வதில்லை


மளிகை, காய்கறி-பழங்கள் விற்பனை வாகனங்கள் வீட்டின் அருகே செல்வதில்லை
x
தினத்தந்தி 30 May 2021 3:17 AM IST (Updated: 30 May 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நகர்ப்பகுதியில் மளிகை, காய்கறி-பழங்கள் விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்கள் வீட்டின் அருகே செல்லாமல், சாலையோரத்தில் நிறுத்துவதால், அதனை வாங்க வரும் ெபாதுமக்களின் நடமாட்டம் அதிகரிக்கிறது.

பெரம்பலூர்:

மளிகை, காய்கறி-பழங்கள் விற்பனை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 24-ந்தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி, பழக்கடைகள் திறக்கவும் அனுமதி கிடையாது. இதனால் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் 21 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் தேவையான மளிகை பொருட்கள் ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நகர்ப்பகுதியில் பழங்கள் விற்பனை செய்ய 5 நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் விற்பனை செய்ய வார்டுக்கு ஒரு நடமாடும் வாகனம் என மொத்தம் 21 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வார்டு பகுதிகளுக்கு செல்வதில்லை
கடந்த 24-ந் தேதி முதல் இந்த நடமாடும் வாகனங்கள் மூலம் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று மளிகை, காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதேபோல் பேரூராட்சி, கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மளிகை, காய்கறி, பழங்கள் தோட்டக்கலைத்துறை மூலம் நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது பெரம்பலூர் நகர்ப்பகுதியில் மளிகை, காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட வார்டு பகுதிகளுக்கு சரியாக செல்வதில்லை. அதற்கு பதிலாக சாலையோரத்தில் மரத்தடியில் வாகனங்களை நிறுத்தி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு சாலையோரத்துக்கு வந்து வாகனங்களில் மளிகை, காய்கறி, பழங்கள் வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கில் பொதுமக்கள் சாலையில் நடமாடக்கூடாது என்பதற்காக வீட்டின் அருகே சென்று மளிகை, காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கே நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு
ஆனால் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி வாகனங்கள் வார்டுகளுக்கு செல்லாமல் சாலையோரத்தில் நிறுத்தி வைத்து விற்பனை செய்து வருவதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து, சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் மளிகை, காய்கறி, பழங்கள் அதிக விலை இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் போலி அனுமதி கடிதத்துடன் வியாபாரிகள் வாகனங்கள் மூலம் மளிகை, காய்கறி, பழங்களை நகர்ப்பகுதியில் விற்று வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் மளிகை, காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்கள் பொதுமக்கள் வசிக்கும் வீட்டின் அருகே சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story