சாராயம் காய்ச்சி விற்ற 9 பேர் கைது


சாராயம் காய்ச்சி விற்ற 9 பேர் கைது
x
தினத்தந்தி 29 May 2021 9:51 PM GMT (Updated: 29 May 2021 9:51 PM GMT)

கீழப்பழுவூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். 15 லிட்டர் சாராயம், 200 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர்.

கீழப்பழுவூர்:

வாகன சோதனை
கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையை தவிர வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறி வெளியே வருபவர்களுக்கு போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு, அபராதம் விதித்து வருகின்றனர். இதேபோல் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை நடத்தினர். இதில் அந்த வாகனத்தில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரித்தபோது, கீழப்பழுவூர் அருகே உள்ள மலத்தான்குளம் கிராமத்தில் இருந்து சாராயம் வாங்கி வருவதாக கூறினார்.
9 பேர் கைது
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி மற்றும் மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று மலத்தான்குளம் கிராமத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தி விசாரித்தனர்.
இதையடுத்து சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த வேளாங்கண்ணி ராபர்ட்(வயது 36), செல்லையா மகன் பாலகுமார்(22), கோவிந்தராஜ் மகன் பாலமுருகன்(21), கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அருள் மகன் சக்திதுரை(21), செந்தில்குமார் மகன் அருள்பிரசாத்(20), ஆங்கியனூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகன் கரண்(21), பெரிய பட்டாக்காடு கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் மோகன்ராஜ்(21), மலத்தாங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் மார்க்கண்டேயன்(23) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 9 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாராயம்- ஊறல் பறிமுதல்
மேலும் அவர்களிடம் இருந்து 15 லிட்டர் சாராயம், 200 லிட்டர் ஊறல், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பேரல், பாத்திரம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story