ஈரோடு மாவட்டத்தில், தி.மு.க. சார்பில் 10 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வினியோகம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


ஈரோடு மாவட்டத்தில், தி.மு.க. சார்பில் 10 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வினியோகம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 May 2021 10:26 PM GMT (Updated: 29 May 2021 10:26 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 10 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வினியோகிக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 10 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வினியோகிக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல்-அமைச்சர் வருகை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கி இருக்கிறது. அதேசமயம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் குறையாமல் உள்ளது. இந்த பகுதிகளில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக 3 மாவட்டங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்தநிலையில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். 
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்த அவர் சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டத்துக்கு வந்தார். ஈரோடு காலிங்கராயன் இல்லத்துக்கு இரவு 9 மணிக்கு வந்தடைந்தார்.
நிவாரண பொருட்கள்
அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். 
இதையடுத்து தி.மு.க. சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 10 ஆயிரம் பேருக்கு  அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். 
இதையொட்டி 2 முன்கள பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்கி நிவாரண பொருட்கள் வினியோகிக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர்கள் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர்  நல்லசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
முதல்-அமைச்சர் வருகையையொட்டி போலீஸ் ஏ.டி.ஜி.பி.க்கள் டேவிட்சன் ஆசீர்வாதம், தாமரைக்கண்ணன், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. அமல்ராஜ், டி.ஐ.ஜி. நரேந்திரநாயர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். அதன்பிறகு திருப்பூர் மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

Next Story