மத்திய அரசிடம் இருந்து மேலும் 12 லட்சம் தடுப்பூசிகள் பெறப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


மத்திய அரசிடம் இருந்து மேலும் 12 லட்சம் தடுப்பூசிகள் பெறப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 30 May 2021 3:57 AM IST (Updated: 30 May 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசிடம் இருந்து மேலும் 12 லட்சம் தடுப்பூசிகள் பெறப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
மத்திய அரசிடம் இருந்து மேலும் 12 லட்சம் தடுப்பூசிகள் பெறப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
முதல்-அமைச்சர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பேசும்போது கூறியதாவது:-
படுக்கை வசதிகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவர் தினமும் அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகிறார். பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 610 படுக்கைகள் உள்ளன. அங்கு கூடுதலாக 300 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. மேலும் 400 கூடுதல் படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார். மேலும் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைக்கிறார்.
தடுப்பூசிகள்
கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. மேலும் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள நபர்களுக்கான தடுப்பூசியானது, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.85 கோடி செலுத்தப்பட்டு 13 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. மேலும் 12 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டு பிரித்து வழங்கப்படும்.
தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில் 3 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகளை உலகளாவிய ஒப்பந்தந்தின் மூலம் பெறுவதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதுவரை தமிழகம் முழுவதும் 95 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டு 82 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., அந்தியூர் எஸ்.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தியூர்), சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), உதவி கலெக்டர் (பயிற்சி) ஏக்கம் ஜேசிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் இளங்கோவன், ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ராஜசேகரன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சவுண்டம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Next Story