கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மருத்துவ ஆலோசனை பெற 7 ஆயிரம் அழைப்புகள்; மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மருத்துவ ஆலோசனை பெற இதுவரை 7 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு
கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மருத்துவ ஆலோசனை பெற இதுவரை 7 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுப்பாட்டு அறை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. அதன்படி கடந்த 17-ந் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியாற்று வருகின்றனர்.இதில் கொரோனா சிகிச்சை பெற ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதி குறித்தும், தடுப்பூசி குறித்தும், பரிசோதனை குறித்தும், முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு குறித்தும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்த 10 தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தினமும் பொதுமக்கள் நேரம் காலம் பார்க்காமல் கொடுக்கப்பட்டுள்ள 10 தொலைபேசி எண்களில் தங்கள் சந்தேகங்களை தெளிவு படுத்தி வருகின்றனர்.
7 ஆயிரம் அழைப்புகள்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மாநகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருந்து அதிகமான அழைப்புகள் வருகிறது. பெரும்பாலானோர், காய்ச்சல் வந்த நிலையில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை வழங்க மறுப்பதாகவும், சில மருந்துகள் எங்கு கிடைக்கும் என்றும் கேட்கிறார்கள்.
மேலும் சிலர் தடுப்பூசி போடுவது குறித்தும், பரிசோதனை எங்கு மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் கேட்டனர்.
இன்னும் சிலர் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் எந்த மருத்துவமனையில் இருக்கிறது என்றும் தெரிந்து கொண்டனர். கிட்டத்தட்ட 11 நாட்களில் மட்டும் மருத்துவ ஆலோசனை பெற இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. தினசரி சராசரியாக 700-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story