மாநகராட்சி பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு


மாநகராட்சி பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு
x
தினத்தந்தி 30 May 2021 12:02 AM GMT (Updated: 30 May 2021 12:02 AM GMT)

கொரோனா தடுப்பூசி போடும் பணி

சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 18 முதல் 45 வயது வரையிலான மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் 3 மண்டலங்களில் நடைபெற்றது  சூரமங்கலம் மண்டலத்தில் திருவாக்கவுண்டனூர் ஜி.வி.என். மண்டபத்திலும், அம்மாபேட்டை மண்டலத்தில் அம்மாபேட்டை ரவுண்டானா பகுதியில் உள்ள வைஸ்யா கல்யாண மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் திருச்சி கிளை ரோடு எஸ்.என்.எஸ். மண்டபத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த சிறப்பு முகாம்கள் மூலமாக சேலம் மாநகராட்சி பணியாளர்களின் 18 முதல் 45 வயது வரையிலான குடும்பத்தினர் 612 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
சூரமங்கலம் மண்டலம் திருவாக்கவுண்டனூர் ஜி.வி.என். மண்டபத்தில் நடைபெற்ற மாநகராட்சி பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் பயன்பாட்டிற்காக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 2 ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்களை சேலம் திரிவேணி பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் அசோகன், உதவி ஆணையாளர் ராம்மோகன், மருத்துவ அலுவலர் செந்தா கிருஷ்ணா, சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story