லாரி டிரைவர் என்றுநினைத்து அடித்த போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்


லாரி டிரைவர் என்றுநினைத்து அடித்த போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்
x
தினத்தந்தி 30 May 2021 4:59 PM IST (Updated: 30 May 2021 5:51 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே முரம்பு மண் எடுத்து வந்த லாரி டிரைவர் என்று நினைத்து தவறுதலாக வாலிபர் ஒருவரை அடித்த போலீஸ் ஏட்டு தாக்கப்பட்டார்.

அரக்கோணம்

லாரி சிறை பிடிப்பு

அரக்கோணத்தை அடுத்த சோகனூர் பகுதியில் கடந்த 28-ந் தேதி இரவு மொரம்பு மண் எடுத்து வந்த லாரியை மடக்கி, அந்தப் பகுதியாக வரகூடாது என இளைஞர்கள் சிலர் டிரைவரிடம் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த நிலையில் மொரம்பு மண்ணை கொட்டி விட்டு அந்த வழியாக லாரி திரும்பி வந்த போது அப்பகுதி இளைஞர்கள் லாரியை சிறைபிடித்து வைத்து கொண்டனர். 

மேலும், இது குறித்து அரக்கோணம் தாசில்தார் பழனிராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

போலீஸ் ஏட்டுமீது தாக்குதல்

தனிப்பிரிவு ஏட்டு குணசேகரன், தாசில்தார் பழனிராஜனை வரவழைத்து அவரும் அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது லாரி டிரைவர் என நினைத்து அங்கிருந்த வாலிபர் ஒருவரை போலீஸ் ஏட்டு குணசேகரன் அடித்ததாக கூறப்படுகிறது. அவர் டிரைவர் இல்லை என்று தெரிந்ததும் போலீஸ் ஏட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால் அதை ஏற்காத சிலர் போலீஸ் ஏட்டு குணசேகரனை கையாலும், கற்களாலும் சரமாரியாக தாக்கினர். இதனால் தலையில் பலத்த காயமடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் ஏட்டு குணசேகரன் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story