சேதமடைந்துள்ள விளையாட்டு உபகரணங்கள்
உடுமலையை அடுத்த தின்னப்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி சேதமடைந்து வருகிறது. இவற்றை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளி
உடுமலையை அடுத்த தின்னப்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி சேதமடைந்து வருகிறது. இவற்றை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
உடலுக்கு வலிமை உள்ளத்திற்கு உறுதி, தன்னம்பிக்கை, புத்துணர்வு அளிப்பது, உடற்பயிற்சியும் விளையாட்டுகளாகும். கடந்த காலத்தில் தெருக்களில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடி வந்த நொண்டி, பச்சைக்குதிரை, கில்லி, கோ-கோ போன்றவை இன்று ஏட்டளவில்தான் உள்ளது. தினந்தோறும் மாலையில் குருவின் பார்வையில் நடைபெற்று வந்த யோகாசனம், சிலம்பம், கபடி, வாள்சண்டை, உடற்பயிற்சி இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்குள் ஏற்பட்ட ஒற்றுமை, சகோதரத்துவம், தனிமனிதஒழுக்கம், தலைமைப்பண்பு, விட்டுக்கொடுத்தல், பொதுநலன், சமூகம் சார்ந்த தொடர்பு கேள்விக்குறியாகி விட்டது.
வழிகாட்டுதல்இல்லை
விளையாடும்போது மூச்சுக்குழாய் சுருங்கி விரிந்து உடலில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரித்து ஆரோக்கியத்தையும் வயதுக்கேற்ற வளர்ச்சியை அளித்தது. வியர்க்க விறுவிறுக்க ஓடியாடி விளையாட வேண்டிய சிறுவர்கள் இன்று ஒற்றை செல்போனில் அறைக்குள் முடங்கி உள்ளனர். பரந்து விரிந்த வீதியில் விளையாடுவதை விடவும் பத்துக்கு பத்து அறையில் 10 இன்ச் செல்போனில் விளையாடும் பழக்கமே இன்று அதிகரித்து வருகிறது. இதனால் உடலும் உள்ளமும் வலுவிழந்து வருவதுடன் தன்னம்பிக்கை, கண்பார்வை இழப்பு, விடாமுயற்சி, மன தைரியம் குழந்தைகள் மத்தியில் குறைந்து வருகிறது. ஆனால் தெருவில் இறங்கி விளையாடியது காலத்தில் எந்த நோயும் குழந்தைகளை தாக்கவில்லை. இயற்கை அளிக்கும் எதிர்ப்பு சக்தி தானாகவே உடலுக்கு கிடைத்து வந்தது.
அறைக்குள்முடக்கம்
இந்த நிலையில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக கிராமங்கள் தோறும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் அதிக உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் சிறுவர்கள் விளையாடி வந்தனர். அதற்கு அடுத்த வந்த நாட்களில் அதை முறையாக பராமரிப்பதற்கு ஊராட்சி நிர்வாகங்கள் முன்வரவில்லை. இதன்காரணமாக உபகரணங்களைச் சுற்றி புதர்மண்டி விட்டதுடன் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்தது. இதனால் அங்கு விளையாடச் சென்ற சிறுவர்கள் அச்சத்திற்கு உள்ளானதுடன் விளையாட்டுகளை தவிர்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதனால் பல ஆயிரங்கள் செலவில் அமைக்கப்பட்ட உபகரணங்கள் பழுதடைந்ததுடன் அவை அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் நிதியும் வீணாகி வருகிறது.
ஆரோக்கியம் மீட்கப்படுமா
கொரோனா காரணமாக தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபட முடியாது. இந்த சூழலை பயன்படுத்தி தின்னப்பட்டி சாளையூர் ஊராட்சி மட்டுமின்றி உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களையும் அது அமைக்கப்பட்டுள்ள பகுதியையும் சீரமைத்து பராமரிப்பதற்கு முன் வரவேண்டும். நிலைமை சீரடைந்த பின்பாக பெற்றர்களும் சிறுவர்களை செல்போனில் விளையாடுவதற்கான அனுமதிக்காமல் வெட்ட வெளியில் குழு விளையாட்டுகளில் ஈடுபடுத்துவதற்கு முன்வர வேண்டும்.
இதனால் உடலும் உள்ளமும் புத்துணர்வு பெறுவதுடன் குழந்தைகளும் ஆரோக்கியமாக திகழ்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் கொரோனா காரணமாக வீட்டில் முடங்கி உள்ள பொதுமக்கள் மூச்சுப்பயிற்சி, எளியவகை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் மன அழுத்தமும் குறைந்து உடலில் நோய் எதிர்ப்புசக்தி மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
Related Tags :
Next Story