சிறுமலை நீர்வீழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி சாவு
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சிறுமலை நீர்வீழ்ச்சிக்கு மலைப்பாதையில் சென்றபோது மூச்சு திணறல் ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த விஜயன் மகன் நோபல் நேதாஜி (வயது 28). கூலித்தொழிலாளி.
நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களான அலெக்ஸ்பாண்டி, நிவாஸ், சரவணன் உள்பட 11 பேருடன் சேர்ந்து பள்ளபட்டி மாவூர் அணைக்கு மேல் உள்ள பகுதியில் இருக்கும் சிறுமலை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர்.
பள்ளப்பட்டி பகுதி வழியாக சிறுமலைக்கு ஏறினர். மலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்றபோது நோபல் நேதாஜிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரால் மலை ஏற முடியவில்லை.
இதனால் அவர் வீட்டிற்கு திரும்பி செல்வதாக நண்பர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நோபல் நேதாஜியை வீட்டுக்கு செல்லும்படி நண்பர்கள் கூறிவிட்டு அவர்கள் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் நீர்வீழ்ச்சியில் குளித்து விட்டு வீட்டுக்கு இரவு திரும்பினர். ஆனால் நோபல் நேதாஜி மட்டும் வீடு திரும்பவில்லை. உடனே அவருடைய தாயார் வாசுகி நண்பர்களிடம் கேட்டார்.
அவர்கள் பாதி வழியிலேயே அவர் வீடு திரும்பியதாக கூறினர். இதற்கிடையே சிறுமலை பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக அம்மையநாயக்கனூர் போலீசார் தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தபோது நோபல் நேதாஜி இறந்து கிடந்தார். அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மைக்கேல் டேவிட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story